Latestமலேசியா

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஹராப்பானுக்கு வலுவான ஆதரவு கோரிய அன்வார்; எதிர்கால கூட்டணிக்கு இந்தத் தேர்தலே அடித்தளம் என சாஹிட்

நெகிரி செம்பிலான், ஜூலை-19-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி ஆகியோர், தங்களது கூட்டணிகளுக்கான ஆதரவை வலியுறுத்தி வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரதமருமான அன்வார் இப்ராஹிம், நெகிரி செம்பிலான் மக்களிடம் பக்காத்தான் ஹராப்பானுக்கு மேலும் வலுவான ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்மூலம் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் தலைமையிலான தூய்மையான, நிலையான மற்றும் கொள்கை அடிப்படையிலான நிர்வாகம் தொடரும் என்றார்.

2018 முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் மேலும் வளமான எதிர்காலத்தை உருவாக்க இன்னும் பல பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அன்வார் தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், பாரிசான் நேஷனல் தலைவர் ஜாஹிட் ஹமிடி, நெகிரி செம்பிலானில் பாரிசான்-பெரிக்காத்தான் நேஷனல் இடையிலான தேர்தல் ஒத்துழைப்பின் வெற்றியே, மலாக்கா மாநிலத் தேர்தல் மற்றும் 16வது பொதுத் தேர்தலுக்கான எதிர்கால அரசியல் வியூகத்தை தீர்மானிக்கும் என தெரிவித்தார்.

இந்தத் தேர்தலின் முடிவுகளை முதலில் மதிப்பீடு செய்த பின்னரே அடுத்தகட்ட அரசியல் ஒத்துழைப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், தற்போது இரு தரப்புக்கும் இடையிலான ஏற்பாடு தொகுதி மோதல்களைத் தவிர்ப்பதற்கான தேர்தல் புரிந்துணர்வு மட்டுமே; இது அதிகாரப்பூர்வ கூட்டணி அல்ல என்றும் அவர் விளக்கினார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் கிடைத்த வெற்றியைப் போலவே, நெகிரி செம்பிலானிலும் பாரிசான் நேஷனல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் சாஹிட் வெளிப்படுத்தினார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சிச் செயல்திறன், எதிர்கால கூட்டணி வியூகம் மற்றும் மக்கள் நல வாக்குறுதிகளை முன்னிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!