
நெகிரி செம்பிலான், ஜூலை-19-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று சுமுகமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மக்கள் மைய (Hyper-Local) பிரச்சாரத்தை பக்காத்தான் ஹராப்பான் (PH) முழுவீச்சில் தொடங்கியுள்ளது.
அரசியல் நிலைத்தன்மை, தூய்மையான நிர்வாகம் மற்றும் மக்களுக்கு நெருக்கமான ஆட்சியை முன்னிறுத்தி நேரடியாக வாக்காளர்களைச் சந்திக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கூட்டணி தெரிவித்துள்ளது.
தேர்தல் இயந்திரம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், மத்திய தலைமை, கூட்டணிக் கட்சிகள், இளைஞர் மற்றும் மகளிர் அணிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்தல், நடைபயண பிரச்சாரம் மற்றும் நேரடி கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் கருத்துகளையும் தேவைகளையும் அறியும் மக்கள் மைய அணுகுமுறையே முக்கிய தேர்தல் உத்தியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் மற்றும் குடும்ப வாக்காளர்களைச் சென்றடைய சமூக ஊடகங்களும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் என்றும், தேர்தல் அறிக்கையும் வாக்குறுதிகளும் வெளிப்படையாக மக்களிடம் கொண்டு செல்லப்படும் என்றும் பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.
பிரச்சாரத்தின் போது உணர்வுகளை தூண்டக்கூடிய அரசியல் மற்றும் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்து, மக்களின் சமூக-பொருளாதார நலனை மேம்படுத்தும் தீர்வுகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களையே முன்னிறுத்தப் போவதாகவும் அக்கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
எதிரணியின் அரசியல் நகர்வுகளில் கவனம் செலுத்தாமல், தங்களின் ஆட்சிச் செயல்திறன் மற்றும் மாநில வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் மக்களின் ஆதரவைப் பெறுவதே இலக்கு என தெரிவித்துள்ள பக்காத்தான் ஹராப்பான், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஹருன் தலைமையில் மாநிலத்தின் வளர்ச்சியும் அரசியல் நிலைத்தன்மையும் தொடர, தங்களது வேட்பாளர்களுக்கு வலுவான ஆதரவை வழங்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



