
அம்மான், ஜூலை-19-ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், தற்காப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் CENTCOM உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் மேலும் ஒரு வீரர் மாயமாகி, 4 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 7 நாட்களாக ஈரானின் இராணுவ மற்றும் தளவாட கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்குப் பதிலடியாக ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் இந்தத் தாக்குதல் குவைத், ஈராக், பஹ்ரேய்ன் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலும் எதிரொலித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுக்கு ‘மறக்க முடியாத பாடங்கள்’ புகட்டப்படும் என எச்சரித்துள்ளார்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஈரான்- அமெரிக்கா/இஸ்ரேல் போரின் தொடக்கத்திலிருந்து இதுவரை 16 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்து, 430-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



