
குவாந்தான், அக்டோபர்-25, பஹாங்கில், ஜாலான் லிப்பிஸ் – ரவூப் சாலையில் உணவுக் கடைப் பணியாளர் பாராங் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் அறுவரைத் தேடுகிறது.
கடந்த செவ்வாய்க் கிழமை நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில், அக்கடையின் உரிமையாளர் மறுநாள் போலீசில் புகார் செய்தார்.
இரவு 11.30 மணியளவில் முகமூடி அணிந்திருந்த ஆறு ஆடவர்கள் Honda CRV மற்றும் Honda Accord கார்களில் வந்திறங்குவது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
கடைக்குள் புகுந்த அறுவரும் கடையின் உரிமையாளரின் பெயரைக் கேட்டு விட்டு, அங்கிருந்த பணியாளரின் கைமுட்டியில் பாராங் கத்தியால் வெட்டி விட்டு கார்களில் தப்பியோடினர்.
கையில் வெட்டுப் பட்ட 28 வயது உள்ளூர் ஆடவர் உடனடியாக ரவூப் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அவருக்கு 14 தையல்கள் போடப்பட்டன.
அத்தாக்குதலுக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக ரவூப் போலீஸ் கூறியது.