
கோலாலம்பூர், அக்டோபர்- 7 – ஒருங்கிணைக்கப்பட்ட புதியத் தேசியக் குடிநுழைவு முறையான NIISe மூலம், குடிநுழைவு இலாகா பல்வேறு உள்நாட்டு மற்றும் அனைத்துலக அமைப்புகளிடமிருந்து தகவல்களை _real-time_ அதாவது நிகழ்நேர முறையில் பெறவுள்ளது.
அனைத்துலகப் போலீஸான Interpol, அரச மலேசியப் போலீஸ் படை, சிறைச்சாலை இலாகா, உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN, தேசிய உயர் கல்வி நிதிக் கழகமான PTPTN மற்றும் போக்குவரத்து அமைச்சு உள்ளிட்ட அமைப்புகளின் தரவுகள் இந்தப் புதிய முறையுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
இதன் மூலம், நாட்டுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பயணிகளின் பின்னணியை விரைவாகச் சரிபார்த்து, பாதுகாப்பு அபாயங்களை மேலும் திறம்பட அடையாளம் காண முடியும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள MyIMMs குடிநுழைவு முறைக்குப் பதிலாக NIISe கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, AI மற்றும் _data analytics_ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நாட்டின் எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சொன்னார்.
நில மற்றும் கடல் எல்லைகளில் 24 மணி நேர கண்காணிப்புடன், சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையே தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த எல்லைப் பாதுகாப்பு முறையை உருவாக்குவதே இதன் நீண்டகால இலக்காகும் என்றார் அவர்.



