
ஜகார்த்தா, நவம்பர்-22 – இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்கு சுமார் 14 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 25.8 கிலோ கிராம் தங்கத்தைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட 3 முயற்சிகளை அந்நாட்டுச் சுங்க இலாகா முறியடித்துள்ளது.
நவம்பரில் நிகழ்ந்த இச்சம்பவங்கள் தொடர்பில் மலேசியர் ஒருவர் உட்பட 8 பேர் பிடிபட்டுள்ளனர்.
அவர்களில் 34 வயது மலேசிய ஆடவர் ஒருவர், தனது காலணிகளுக்குள் 4 கிலோ கிராம் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 2.25 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அந்தத் தங்கத்துடன், நவம்பர் 12-ஆம் தேதி சுமத்ராவில் உள்ள மினாங்கபாவ் அனைத்துலக விமான நிலையத்தில் அவர் கைதானார்.
இதனிடையே, தென் களிமந்தானில் மேற்கொள்ளப்பட்ட மேலும் 2 சோதனைகளில், கோலாலம்பூருக்குப் பயணிக்கவிருந்த 7 பேரிடமிருந்து 21.8 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றில் 17 தங்கக் கட்டிகள், பயணிகளின் உள்ளாடைகள் மற்றும் கால்சட்டைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணை தொடருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மலேசிய ஆடவருக்கு ஓராண்டு முதல் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.



