
கோலாலாம்பூர், ஜூன்-17 – இஸ்லாத்துக்கு மதம் மாறுவோரைக் குறிக்கும் ‘முவாலாஃப்’களின் பதிவு தொடர்பில் UPSI எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் பெயரில் வெளியான சுவரொட்டி விவகாரம் தொடர்பாக, அம்னோ உலாமாக்கள் சபை துணைத் தலைவர் முஹமட் கைருடீன் அமான் ரசாலியின் கருத்துக்கு மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்விக்கூடங்களில் இஸ்லாமிய போதனைகளைப் பரப்புவதற்கு கூட்டரசு அரசியலமைப்பில் இடமுண்டு என கைருடீன் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள லிங்கேஷ்வரன், மலேசியாவின் பொதுக் கல்வி நிறுவனங்கள் இனம், மதம் கடந்து அனைத்து குடிமக்களுக்கும் பொதுவானவை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சலுகைகள் அல்லது ஊக்கத்தொகைகள் மூலம் பொதுப் பல்கலைக்கழகங்களை மதமாற்றத்திற்கான தளங்களாகப் பயன்படுத்துவது, அவற்றின் நடுநிலைத்தன்மையைக் கெடுத்து, மாற்றுமத மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
பல்லின சமூகத்தின் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் இத்தகைய உணர்வுப்பூர்வமான விவகாரங்களில், பாரிசான் நேஷனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளான ம.இ.கா மற்றும் ம.சீ.ச ஆகியவை இன்னும் மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காகவும், இளைய தலைமுறையின் எதிர்காலத்திற்காகவும் இந்த இரு கட்சிகளும் தங்களின் தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்த, பொது நிறுவனங்களின் தார்மீகப் பொறுப்புக்கூறல் மிக அவசியம் என லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
முஸ்லீம்களாக மதம் மாறி ‘முவாலாஃப்’ களாகப் பதிவுச் செய்யும் மாணவர்களுக்கு, இலவசக் கல்விக் கட்டணம், தங்குமிடக் கட்டன விலக்கு, தேவைப்பட்டால் பண உதவி, வழிகாட்டி வகுப்புகள் உள்ளிட்ட சலுகைகள் காத்திருப்பதாக அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், அது தங்களின் அதிகாரப்பூர்வ போஸ்டர் இல்லையென்றும், விசாரணை நடைபெறுவதாகவும் UPSI நிர்வாகம் கூறியுள்ளது.



