
அம்பாங், ஜூன்-19-அம்பாங்கில் உள்ள பிரபல வணிக வளாகமொன்றின் திறந்தவெளி வாகன நிறுத்தப் பகுதியில், நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் Toyota Vellfire/Alphard மற்றும் BMW உள்ளிட்ட 3 ஆடம்பர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.
Lotus’s Ampang வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து, இரவு 8.35 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பண்டான் இண்டா மற்றும் அம்பாங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 14 வீரர்கள் அடங்கிய குழுவினர், அடுத்த 7 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு, இரவு 8.43 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்தில் Vellfire முற்றிலும் கருகிய நிலையில், BMW மற்றும் ஒரு Honda வாகனங்கள் 80 விழுக்காடு தீக்கிரையாகின.
அதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்பீட்டு மதிப்பு குறித்து தீயணைப்புத் துறையின் தடயவியல் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.



