
கோலாலம்பூர், அக்-28-மடானி அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் மூலம் இந்தியச் சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து சமூகத்தினர் நன்கு அறிந்திருப்பதையும், அவற்றைப் புரிந்து கொள்வதையும் உறுதி செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடர்புத்துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil தெரிவித்துள்ளார். இந்திய அரசு சாரா அமைப்புகள், கோயில் நிர்வாகங்கள் ஆகியவை இந்திய சமூகத்திற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள மானியங்கள், உதவித் திட்டங்கள் குறித்த தகவல்களை எடுத்துரைத்து ஆக்ககரமான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தியச் சமூகத்தினருக்காக பல்வேறு உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மலேசிய மக்கள் நம்பிக்கை நிதியம் (AIM), தெக்குன் நேஷனல் (TEKUN) ஆகியவற்றின் மூலம் 150 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி சிறு வணிகர்களுக்கு வணிகத்தை மேம்படுத்தவும், தேவையான உபகரணங்களை வாங்கவும் உதவும். மேலும், மித்ரா (MITRA) அமைப்புக்காக 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெறுவதில் நிலவும் சிக்கல்கள் குறித்து சமூகத்தினர் தெரிவித்துள்ள கருத்துகள், மித்ரா விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணனிடம் எடுத்துரைக்கப்படும் என Fahmi தெரிவித்தார்.
அதோடு தமிழ்ப்பள்ளிகளைப் பழுதுபார்த்து மேம்படுத்தும் திட்டங்களும் இந்தியச் சமூகத்திற்குப் பயனளிப்பதாக அவர் குறிப்பிட்டார். STR மூலம் ரொக்க உதவித்தொகை பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. மாதாந்திர வாழ்க்கைச் செலவுக்கான உதவிகளைப் பெறத் தகுதியுடையவர்களும் பலர் இருப்பதாக Fahmi சுட்டிக் காட்டினார்.
மற்றொரு நிலவரத்தில், தாமான் ஸ்ரீ செந்தோசாவில் உள்ள AC4 அடுக்குமாடிக் குடியிருப்பில் பழுதடைந்துள்ள மின்தூக்கியை மாற்றுவதற்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணிகள் தொடங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
முன்னதாக Fahmi, Dewan Masyarakat DBKL தாமான் ஸ்ரீ செந்தோசாவில் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். வவுச்சர் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மொத்தம் 1,600 பேருக்கு வவுச்சர்கள் அளிக்கப்படும் நிலையில், அந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்டோருக்கு வவுச்சர்கள் நேரடியாக வழங்கப்பட்டன.
லெம்பா பந்தாய் தொகுதியின் இதர பகுதிகளிலும் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த வவுச்சர்களை அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைத்து, பொதுமக்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



