
ஜோகூர், ஆகஸ்ட்.07- ஜோகூர், Hang Jebat திடலில் நடைபெற்ற தேசிய நில வடிவமைப்பு தினக் கொண்டாட்டத்தின் போது, ஜோகூர் பாரு மாநகர் மன்றம் (MBJB) காட்சிக்கு வைத்திருந்த அலங்காரத் தாவரங்களை, பார்வையாளர்கள் சிலர் இலவசமாக வழங்கப்படும் தாவரங்கள் என்று தவறாக எண்ணி எடுத்துச் சென்றுள்ளனர்.
அச்சம்பவம் குறித்த சமூக ஊடகப் பதிவு ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அது பலரது கவனத்தை ஈர்த்தது.
MBJB காட்சிக்கு வைத்திருந்த அனைத்துத் தாவரங்களும் இலவசமாக வழங்கப்படுபவை என அங்கிருந்தவர்கள் தவறாக நினைத்துக் கொண்டனர்.
உண்மையில் இலவசத் தாவரங்கள் வழங்கும் நிகழ்வு வேறொரு இடத்தில் நடந்து கொண்டிருந்தது.
கண்காட்சி இடத்திலிருந்து கூடுதலாக இருந்த அலங்காரத் தாவரங்களை MBJB ஊழியர்கள் லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக மலாக்கா வரலாற்று நகர மன்றத்தின் (MBMB) மேயர் Datuk Shadan Othman தெரிவித்தார்.
MBJB ஊழியர்கள் அவர்களைத் தடுக்க முயன்றதுடன், அந்தத் தாவரங்கள் இலவசமாக வழங்கப்படுபவை அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினர் இருப்பினும், சில செடிகளைப் பொதுமக்கள் எடுத்துச் சென்று விட்டதாக அவர் கூறினார்.
ஆயிரக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள விலையுயர்ந்த செடிகள் எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை.
பிற செடிகளைத் தவறுதலாக வீட்டிற்கு எடுத்துச் சென்றவர்கள் அவற்றை ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
2026 ‘’தேசிய நில வடிவமைப்பு நாள்’ நேற்று தொடங்கி ஞாயிறுக்கிழமை வரை நடைபெறும்.
அதில் கண்காட்சிகள், விற்பனை, போட்டிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன



