
ஈப்போ, ஜூலை-25-ஈப்போ, புந்தோங், சுங்கை பாரி அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே உள்ள புதர்ப் பகுதியில் 14 வயதுடைய 2 இந்திய பள்ளி மாணவிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து பேராக் போலீஸ் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, உற்றத் தோழிகளான மாணவிகள் இருவரும் ஈப்போவில் ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளனர்; நேற்று மாலை நேர பள்ளி முடிந்து அவர்களாகவே பள்ளியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அதன் பிறகே, சம்பவ இடத்தில் அவர்கள் உணர்வற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ Mohd Alwi Zainal Abidin உறுதிப்படுத்தினர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகிலுள்ள 15 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு, ஈப்போ மாநகர மன்றத்தின் பராமரிப்பில் இருந்ததாகவும், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததால் தற்போது பாழடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த குடியிருப்பாளர்கள் முன்பே வெளியேற்றப்பட்டிருந்தனர்.
தற்போதைய நிலவரப்படி, இச்சம்பவத்தில் வேறு எந்த தரப்பினரின் ஈடுபாடும் இருப்பதற்கான சான்றுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
சவப்பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகள் வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் உறுதிப்படுத்தப்படும் என்றார் அவர்.
சம்பவம் குறித்த தகவல் நேற்று வேகமாக பரவியதைத் தொடர்ந்து, புந்தோங் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில்,
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும், தேவையற்ற யூகங்களை பரப்ப வேண்டாம் எனவும் அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் ஈப்போ போலீஸுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



