
மூவார், ஆகஸ்ட் 26 – மூவாரில், டாக்சி கட்டணம் செலுத்த முடியாததால் ஏற்பட்ட தகராறில் ரோஹிங்கியா நபரை வாகனத்தால் மோதி கொன்ற 31 வயதான டாக்சி ஓட்டுநருக்கு மொத்தம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிக்கு ஆறு ஆண்டுகள் சிறையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதித்தார். அபராதத்தை செலுத்தத் தவறியதால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2022 அக்டோபர் 19ஆம் தேதி, பாதிக்கப்பட்ட நபர் தனது மருமகனுடன் ஜோகூர் பாருவிலிருந்து பத்து பஹாட்டுக்கு குறித்த டாக்சியில் பயணம் செய்தார். பத்து பஹாட்டை அடைந்தபோது, முழுக் கட்டணத்தையும் செலுத்த பணம் இல்லை என அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், ஓட்டுநர் வாகனத்தில் ஏறி வேகமாக பின்னோக்கி செலுத்தியதில், தனது மருமகனை காப்பாற்ற முயன்ற ரோஹிங்கியா நபர் மீது வாகனம் மோதியது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



