
கோத்தா பாரு, ஆகஸ்ட்.21-கிளந்தான், Jeli அருகே Kampung Lubuk Bongor பகுதியில் கைது நடவடிக்கையின் போது காவல் வீரர் ஒருவரைக் காயப்படுத்திய நபர் ஒருவழியாகக் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரான அந்த உள்நாட்டு ஆடவர், சோதனையின் போது தமது இடுப்புப் பகுதியில் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை வெளியே எடுத்து மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக Jeli மாவட்டக் காவல் துறை தலைவர் Superintendan Kamarulzaman Harun தெரிவித்தார்.
அதோடு காவர் வீரர்களை நோக்கி அவர் பெரிய கத்தியைக் காட்டி அவர்களைக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் காவல் வீரர் ஒருவரின் இடது கை நடுவிரலிலும் இடது தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது. அதனை அடுத்து அவ்வாடவர் கைது செய்யப்பட்டார்.
அவரைச் சோதனையிட்டதில் இடுப்புப் பையிலிருந்து சுமார் 36 சென்டிமீட்டர் நீளமுள்ள பெரிய கத்தியும் போதைப்பொருளாக இருக்கலாம் என நம்பப்படும் ஆறு சிவப்பு நிற மாத்திரைகள் அடங்கிய பிளாஸ்டிக் பையும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பில் அந்நபர் தேடப்பட்டு வந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி போலீசார் சோதனை நடத்திய போது, பெரிய கத்தியை வீசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுவது தொடர்பிலும் அவர் தேடப்பட்டு வந்தார்.
அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 324 மற்றும் 353-வது பிரிவுகள் மற்றும் 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 12(2)-வது பிரிவின் கீழும் விசாரிக்கப்பட்டு வருகிறது. கைதான நபரைத் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி பெறப்படும் என Kamarulzaman தெரிவித்தார்.



