கோத்தா திங்கியில் பெண் பயணியைக் கடத்த முயன்ற E-hailing ஓட்டுநர்? குற்றச்சாட்டை மறுத்த போலிஸ்

ஜோகூர் பாரு, ஜூலை-20-ஜோகூர், கோத்தா திங்கியில் E-hailing ஓட்டுநர் ஒருவர் பெண் பயணியைக் கடத்த முயன்றதாகப் பரவியுள்ள தகவல் உண்மையல்ல என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட E-hailing ஓட்டுநர் கடந்த 15 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கோத்தா திங்கி மாவட்டக் காவல் துறைத் தலைவர் Suprintendan Yusof Othman தெரிவித்தார்.
அந்தப் பெண் பயணி காரணம் ஏதுமின்றி திடீரென வாகனத்திலிருந்து இறங்கியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்பெண்மணியைக் கடத்தத் தாம் முயற்சிக்கவில்லை என அந்த ஆடவர் கூறினார்.
மேலும் கடத்தலுக்கான எந்த அம்சங்களும் கண்டறியப்படவில்லை என்றும் Yusof Othman குறிப்பிட்டார்.
இவ்வேளையில், 40 வயது மதிக்கத்தக்க அந்த ஓட்டுநர், Jalan Bypass Kota Tinggi பகுதியில் உள்ள தேங்காய் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்வதற்காக அந்தப் பெண் பயணியை ஏற்றியதாக அந்த ஓட்டுநரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அப்பெண் திடீரென உதவி கோரி அலறியவாறே வாகனத்திலிருந்து வெளியேறியுள்ளார். அச்சம்பவத்தைச் சில பொதுமக்கள் கண்டனர். பின்னர் பயணியின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து, அப்பெண்ணுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறியதாக அந்த E-hailing ஓட்டுநர் குறிப்பிட்டதாகவும் காவல் துறை தெரிவித்தது.
கருப்பு நிற பெரோடுவா மைவி காரில் இருந்த ஒரு E-hailing ஓட்டுநர் பெண் பயணியைக் கடத்த முயன்றதாக முன்னதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியிருந்தன. அதில் ஓட்டுநரின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் பதிவு எண் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. அதோடு அந்நபர் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



