Latestமலேசியா

கோம்பாக் சிறார் இல்லப் பாலியல் கொடூரம்: காப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை; 5 பிரம்படிகள்

கோம்பாக், மே-21-சிலாங்கூர், கோம்பாக்கில் உரிமம் பெறாத சிறார் காப்பகத்தில், தன் பொறுப்பில் இருந்த சிறுவன்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட காப்பாளர் ஒருவருக்கு அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

2 சிறுவன்களிடம் அவ்வாறு நடந்துகொண்டதாகக் கொண்டு வரப்பட்ட 6 குற்றச்சாட்டுகளை 25 வயது ரெத்னவேலு ஒப்புக் கொண்டதை அடுத்து, நீதிபதி இன்று அத்தீர்ப்பை வழங்கினார்.

சிறைத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

காப்பகத்தில் இருந்த 8 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை மற்றும் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டதாக அவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார்.

கடந்தாண்டு நவம்பர் முதல் இவ்வாண்டு மார்ச் வரை இந்த அநாகரீகக் குற்றங்கள் காப்பகத்தின் உள்ளேயே நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சில சிறார்களிடம் அதேபோன்ற பாலியல் சீண்டல் தொடர்பில் ரெத்னவேலு கூடுதலாக 9 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவற்றுக்கான தண்டனை ஜூன் 4-ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றன.

இவ்வழக்கில், முன்னதாக ரத்னவேலு உட்பட 4 சந்தேக நபர்கள் கைதாகி விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களில், காப்பகத்தை உரிமம் இன்றி நடத்திய 31 வயது அதன் உரிமையாளரும் அடங்குவார்.

அக்காப்பகத்தின் முன்னாள் குடியிருப்பாளர்களான இரு சிறார்கள் அண்மையில் 18 வயதை அடைந்த நிலையில், இந்த பாலியல் வன்கொடுமைகளை வெளிச்சத்துகுக் கொண்டு வந்தனர்.

அங்கிருந்த 36 சிறார்களில் குறைந்தது 12 பேராவது இந்தக் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

சிறுவன்கள் ஓரினப் புணர்ச்சிக்கு ஆளானதை உறுதிப்படுத்தும் வகையில், மருத்துவ பரிசோதனையில், அவர்களது உடலில் பழைய மற்றும் புதியக் காயங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டே இத்தகைய துரோகத்தில் ஈடுபடுவதா என, முன்னதாக சமூகத்தில் பெரும் கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!