
கோலாலம்பூர், ஜூன்-18 – சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் மானிய சமையல் எண்ணெயை சட்டவிரோதமாக சேமித்து, மறுவிற்பனை செய்து வந்த கும்பலின் செயலை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சான KPDN கண்டுபிடித்துள்ளது.
சிரம்பானிலுள்ள இரண்டு இடங்களிலும், ஸ்ரீ கெம்பாங்கானிலுள்ள ஒரு இடத்திலும் நடத்தப்பட்ட சோதனைகளில், 393,040 ரிங்கிட் மதிப்புள்ள 59,000 கிலோகிராமுக்கும் அதிகமான மானிய சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் திரவங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆரம்ப விசாரணையில், உரிமம் பெற்ற மொத்த விற்பனையாளர்களிடமிருந்து மானிய சமையல் எண்ணெயை பெற்று, அதன் பாக்கெட்டுகளை அகற்றி பெரிய தொட்டிகளில் சேமித்து, பின்னர் மூன்றாம் தரப்பினருக்கு அதிக லாபத்திற்காக விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையின்போது, மூன்று மலேசியர்கள் மற்றும் ஆறு வெளிநாட்டவர்கள் உட்பட ஒன்பது பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு, பொருள் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. KPDN, மானியப் பொருட்கள் தொடர்பான மோசடிகளை ஒடுக்க கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளது.



