
செராஸ், செப்டம்பர் 28 – சனிக்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில், செராஸ் பத்து 9 காவல் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 54 வயது நபர், பணியில் இருந்த போலீஸ்காரரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி கேட்ட அந்த நபரிடம் போலீஸ்காரர் விசாரித்தபோது, அவர் மோட்டார் சைக்கிளின் பின்புறப் பெட்டியிலிருந்து சுமார் 20 செண்டி மீட்டர் நீளமுள்ள கத்தியை எடுத்து போலீஸ்காரரின் வயிற்றுப் பகுதியில் குத்த முயன்றார். ஆனால், கத்தி போலீஸ்காரரின் பெல்ட்டில் பட்டு, அவர் காயமடைவது தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து ஏற்பட்ட மோதலில், மற்ற இரண்டு போலீஸ்காரர்கள் உதவிக்கு வந்து அந்த நபரை மடக்கிப் பிடித்த போது அதில் ஒரு போலீஸ்காரரின் இரு உள்ளங்கைகளிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
சந்தேகநபருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லையென ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து சம்பவத்தின் நோக்கம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



