
ஜகார்த்தா, ஏப்ரல்-28-இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இரயில் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
பெகாசி (Bekasi) நகரின் கிழக்கு இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் இரயில் மீது, அதிவேகமாக வந்த Argo Bromo Anggrek எனும் தொலைதூர இரயில் பின்புறமாக மோதியது.
இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 81 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பயணிகள், இரயிலில் இருந்தவர்களாவர்; இன்னொரு இரயிலில் இருந்த 240 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பெண்களுக்கான இரயிலின் பின்பக்கப் பெட்டிகள் கடுமையாகச் சேதமடைந்ததில், பல பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்துக்குச் சற்று முன்பாக, _level crossing_ எனப்படும் தண்டவாளத்தைக் கடக்குமிடத்தில் பயணிகள் இரயில் மீது ஒரு டாக்சி மோதியதால், இரயில் தண்டவாளத்திலேயே நின்றுவிட்டதாகவும், இதனால் அவ்வழியே வந்த இரயில் அதனை மோதியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து இரயில்வே நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடருவதால், மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.



