
கோலா திரங்கானு, ஆகஸ்ட்.14-திரங்கானு, கோலா திரங்கானுவில் Jalan Kelantan, Kampung Batu Enam, Batu 8 பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஏறக்குறைய 16,000 ரிங்கிட் மதிப்புடைய தங்க வளையலைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் இரு பெண்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அச்சம்பவம் நேற்று காலை 10.59 மணிக்கு நிகழ்ந்தது. இரவு 10.25 மணியளவில் அக்கடையின் விற்பனை உதவியாளர் அது குறித்து புகார் கொடுத்ததாக கோலா திரெங்கானு மாவட்டக் காவல் தலைவர் உதவி ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.
கடை ஊழியர் ஒருவர் நகைகளைச் சரிபார்த்த போது, 28.01 கிராம் எடையுள்ள அந்த தங்க வளையல் காணாமல் போனது தெரிய வந்தது.
CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த இரு பெண்களும் கடைக்குள் நுழைந்து, தங்க வளையல்களைக் காட்டுமாறு ஊழியரிடம் கேட்பது தெரிகிறது. அவ்விரு பெண்களில் ஒருவர் வளையல் ஒன்றை தனது மணிக்கட்டில் அணிந்து பார்த்து விட்டு, அதைத் தனது ஆடையின் கைப்பகுதிக்குள் மறைத்துக் கொண்டார். அதோடு அப்பெண் வளையலைக் கீழே போட்டு காலால் மிதித்து, பின்னர் அதை எடுத்துத் தனது கைப்பையில் போட்டுக் கொண்டதும் காட்சியில் பதிவாகியுள்ளது.
அவருடன் வந்த மற்றொரு பெண் வேறொரு தங்க வளையலைக் காட்டி ஊழியரின் கவனத்தைத் திசை திருப்பிய நிலையில், இறுதியில் பணம் எடுத்து வருவதாகக் கூறி கடையை விட்டு வெளியேறிய அவர்கள் திரும்பி வரவில்லை என Azli Mohd கூறினார்.
கடை ஊழியரால் இரண்டாவது சந்தேக நபரை அடையாளம் காண முடிகிறது. ஆனால் முதல் சந்தேக நபரின் முகம் திரையால் மறைக்கப்பட்டிருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை.
காவல்துறை அவ்விருவரையும் தீவிரமாகத் தேடி வருகிறது. தண்டனைச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.



