Latestமலேசியா

தமிழ்ப்பள்ளிகளின் உயிர்நாடி முன்னாள் மாணவர்களே; பெர்தாமாவின் 17ஆவது தேசியப் பேராளர் மாநாட்டில் சிவகுமார் அறைகூவல் 

ஈப்போ, ஆக. 4–  தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியிலும் எதிர்காலத்திலும் முன்னாள் மாணவர்கள் பெரும் பங்களிப்பதாக பேராக், பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார் தெரிவித்திருக்கிறார். எனவே முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் அரசாங்கம் கவனம் செலுத்தி வந்தாலும் முன்னாள் மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஆதரவு மற்றும் தொடர்ச்சியான பங்களிப்பே அவற்றின் எதிர்காலத்தை வலுப்படுத்தும்.

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழ்ப்பள்ளிகளின் அவசியத்தை எடுத்துரைக்கும் பொறுப்பை முன்னாள் மாணவர் அமைப்புகள் ஏற்க வேண்டும் என ஈப்போ UTC-யில் நடைபெற்ற மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்கமான பெர்தாமாவின் 17ஆவது தேசியப் பேராளர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது சிவகுமார் வலியுறுத்தினார். அம்மாநாட்டின் ஏற்பாட்டிற்காக தமது சார்பில் 5,000 ரிங்கிட் நன்கொடை வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

இவ்வேளையில், இம்மாநாட்டில் உரையாற்றிய பெர்தாமாவின் தேசியத் தலைவர் குமரன் மாரிமுத்து, தமிழ்ப்பள்ளிகள் கல்வி நிலையங்கள் மட்டுமல்ல; அவை தமிழ் மொழி, பண்பாடு மற்றும் சமூக அடையாளத்தைப் பாதுகாக்கும் அரண்கள் என்றார். மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்னாள் மாணவர் அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே அம்மாநாடு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை வகுக்கும் முக்கியத் தளமாக அமைந்துள்ளதாக பெர்தாமாவின் தேசிய உதவித் தலைவரும், மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான விஜய் வேலாயுதம் தெரிவித்தார்.

அம்மாநாட்டில் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி ஷாஷா வீரையா, மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத் தலைவர் பழனி சுப்பையா, பெர்தாமா தேசிய ஆலோசகர் மனோகரன் நம்புபிச்சை, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியக் கூட்டமைப்புத் தலைவர் டத்தோ க. இராஜமாணிக்கம், அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், நாடு முழுவதும் உள்ள முன்னாள் மாணவர் சங்கப் பேராளர்கள், பிரதிநிதிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!