
கோலாலம்பூர், நவம்பர் 2 – தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (IPG) பயிலும் மாணவர்கள் நான்கு நாட்களுக்கு இணையவழியில் வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் (Fadhlina Sidek) தெரிவித்தார்.
குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் கல்வி பயிலும் மாணவர்கள், தங்களின் கல்வியைத் தொடர்ந்தபடியே குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு இந்த வசதி வழங்கப்படுகிறது.
இதன்படி, குழு A மாணவர்களுக்கு நவம்பர் 9 முதல் 12 வரையிலும், குழு B மாணவர்களுக்கு நவம்பர் 10 முதல் 13 வரையிலும் கலப்புக் கற்றல் முறை அமல்படுத்தப்படும்.
குழு A-வில் கெடா, கிளந்தான், திரெங்கானு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும், குழு B-வில் பெர்லிஸ், பினாங்கு, பேராக், கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், ஜோகூர், பகாங் மற்றும் சபா மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர்.
தேவை ஏற்பட்டால், ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகங்கள் கூடுதல் விடுமுறை அல்லது மாற்று விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



