கோலாலம்பூர், ஜூன் 20 – கோம்பாக்கில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பிறகு நச்சுணவு உட்கொண்ட சம்பவத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பில் இன்றுவரை 22 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். Sungai Cinchin னில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஏழு நபர்களிடமிருந்து அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன. பிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையாக வெளியான பிறகு விசாரணை அறிக்கை ஒரு மாதத்திற்குள் சட்டத்துறை அலுவலகத்தின் துணை வழக்கறிஞருக்கு அனுப்பி வைக்கப்படும் என கோம்பாக் ஓ.சி.பிடி துணை கமிஷனர் நோர் அரிப்பின் முகமட் நாசிர் ( Noor Ariffin Mohamad Nasir) இன்று குறுஞ்செய்தியில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஜூன் 8 ஆம் தேதி பள்ளி நிகழ்வில் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் Bhihun பிரட்டல் மற்றும் பொறித்த முட்டைகளை உட்கொண்ட பின் நச்சு உணவினால் 17 வயது பையனும் , 2 வயது குழந்தையும் இறந்தனர். அந்த உணவு வெளிதரப்பினால் வழங்கப்பட்டது என்பதோடு அதனை உட்கொண்ட 247 பேரில் 82 பேர் நச்சு உணவின் பாதிப்புக்கு உள்ளாகியதாக சிலங்கூர் மாநில சுகாதார இயக்குனர் டாக்டர் உம்மி கல்தும் சம்சுடின் ( Ummi Kalthom Shamsudin ) இதற்கு முன் கூறியிருந்தார்.