
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13-கோலாலம்பூர், Pantai Hillpark பகுதியில் குப்பை லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுக்குமாடி வேலிச் சுவரை மோதி தள்ளியதில், அங்கிருந்த 3 கார்கள் பலத்த சேதமடைந்தன.
நேற்று அதிகாலை 4.10 மணியளவில் ஜாலான் பந்தாய் முர்னி 1 சாலையில் லாரி இறக்கத்தில் வந்துகொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
லாரியில் பிரேக் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுவரை உடைத்துக் கொண்டு முன்னேறியுள்ளது.
லாரியின் முன்பகுதி கீழே நிறுத்தப்பட்டிருந்த 3 காலியான கார்களின் மீது விழுந்து அவற்றை நசுக்கியது.இந்த விபத்தில் 41 வயது ஓட்டுநருக்குக் காலில் காயம் ஏற்பட்டது.
அவருடன் இருந்த இரண்டு வங்காளதேச ஊழியர்கள் எவ்வித காயமுமின்றி தப்பினர்.ஓட்டுநருக்கு மேற்கொள்ளப்பட்ட மதுபானப் பரிசோதனையில் அவர் மது அருந்தவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட லாரி Puspakom பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீஸார் மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



