Latestமலேசியா

பள்ளிகளில் நிரந்தர பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம்: கல்வி அமைச்சு பரிசீலனை

ஜோகூர் பாரு, மே-12-பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களை நிரந்தரமாக நியமிப்பது குறித்து கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது.

அண்மையக் காலமாக பள்ளிகளில் நடக்கும் அத்துமீறல்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பு அமைச்சின் மிக முக்கிய முன்னுரிமை என்றும், இதற்காக உள்துறை அமைச்சின் ஒத்துழைப்பு நாடப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போலீஸ் அல்லது உதவிப் போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்படலாம்.

இது வெறும் காவல் பணி மட்டுமல்லாமல், பள்ளிகளில் ஒரு “பாதுகாப்பு கலாச்சாரத்தை” உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என ஃபாட்லீனா குறிப்பிட்டார்.

இம்முயற்சிக்கு பெற்றோர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள அதே வேளையில், உடல் ரீதியான பாதுகாப்புடன் மாணவர்களின் மனநலம் மற்றும் ஆலோசனை சேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த உத்தேசத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகாரிகளின் பணிகள் குறித்த முழுமையான ஆய்வு முடிந்த பிறகு, முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!