கோலாலம்பூர், ஆகஸ்ட் -22, காசா முனையில் காயமடைந்து சிகிச்சைக்காக மலேசியா கொண்டு வரப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு, உண்மையில் தங்கள் தாய்நாட்டை விட்டு வர மனமில்லை.
என்ன நடந்தாலும் சொந்த மண்ணிலேயே உயிர் போக வேண்டுமென்பதில் அவர்கள் உறுதியாக இருந்ததாக, வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் (Datuk Seri Mohamad Hasan) தெரிவித்தார்.
எல்லை நாடான ஜோர்டானுக்குச் செல்ல கூட அவர்கள் மறுத்து விட்டனர்.
கடைசியில் பாலஸ்தீன தலைவர்களுடன் பேசியே அவர்களைச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்ததாக மொஹமட் ஹசான் சொன்னார்.
அதுவும், இங்கே சிகிச்சை முடிந்த கையோடு தாயகத்துக்கு திருப்பியனுப்படுவீர்கள் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிறகே அவர்களை இங்கே அழைத்து வர முடிந்ததாக அமைச்சர் கூறினார்.
இஸ்ரேலியத் தாக்குதலில் காசாவில் காயமடைந்த 41 பாலஸ்தீனர்கள், மனிதநேய அடிப்படையில் சிகிச்சைக்காக கடந்த வாரம் மலேசியா கொண்டு வரப்பட்டனர்.
கோலாலம்பூர், துவாங்கு மீசான் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 86 பேரும் உடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.