Latestமலேசியா

மடானி ஆட்சியில் எந்தவொரு தமிழ்ப் பள்ளியும் மூடப்படாது – அமைச்சர் ஃபாட்லீனா உத்தரவாதம்

செபராங் பிறை, செப்டம்பர்-7,மடானி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் உள்ள எந்தவொரு தமிழ்ப் பள்ளியும் மூடப்படாது என கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சிடேக் உத்தரவாதம் அளித்துள்ளார்.

பினாங்கு, நிபோங் திபாலில் உள்ள சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளிக்கான ஒப்புதல் கடிதம் வழங்கும் மற்றும் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழ்ப் பள்ளிகள் மூடப்படலாம் என்ற தவறானப் வதந்திகளைப் பொது மக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

அனைத்துப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்பு மற்றும் ஆசிரியர்-மாணவர் நலன் சார்ந்த திட்டங்களில் மட்டுமே அரசாங்கம் முழு கவனம் செலுத்தும் என அவர் சுட்டிக் காட்டினார்.

முன்னதாக, மடானி அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியச் சமூகம் ஒருபோதும் புறக்கணிக்கப்படாது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்திருந்தார்.

அதற்கு ஏற்ப கல்வி, தொழில்முனைவு, சிறுதொழில் கடன் உதவி மற்றும் நலத்திட்டங்கள் மூலமாக இந்தியச் சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஃபாட்லீனா கூறினார்.

சுமார் 17 ஆண்டு கால இழுபறிக்குப் பிறகு சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளிக்கான புதிய மாற்று கட்டடத்தின் கட்டுமானம் 12.6 மில்லியன் ரிங்கிட் செலவில் தொடங்கியுள்ளது.

Yayasan Didik Negara அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு, பினாங்கு கல்வி இலாகாவின் கண்காணிக்கப்படும் இந்தக் கட்டுமானத் திட்டம் 56 வாரங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​புதியப் பள்ளி, தற்போதைய இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் இடத்தில் கட்டப்படும்.

இதில் 6 வகுப்பறைகள், சிறப்புப் பயன்பாட்டு அறைகள் மற்றும் இதர வசதிகள் இடம்பெறும்.

​சுங்கை பாக்காப் பகுதி வாழ் குழந்தைகளுக்குச் சிறந்த மற்றும் முழுமையான கல்வி வசதிகளை வழங்குவதற்கு இப்புதிய கட்டடம் மிகவும் முக்கியமானது என நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாட்லீனா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!