
கோலாலாம்பூர், மே-21-அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட மன்னராட்சி முறை குறித்து வெளியிட்ட சமூக வலைத்தள பதிவை அடுத்து, DAP-யைச் சேர்ந்த டாமான்சாரா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோனி புவா மீது, போலீஸார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் 28 போலீஸ் புகார்கள் கிடைத்துள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
அந்த பதிவில், நாட்டுக்கும் அரசருக்குமான விசுவாசமானது, அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தே என்றும், மாறாக அவர்களின் ஆணைக்கானது அல்ல என்றும் தோனி புவா கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, குற்றவியல் சட்டம் மற்றும் தொடர்பு – பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக குமார் சொன்னார்.
தோனி புவாவுடன், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும், விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
DAP தலைவர்களைக் குறி வைத்து ருக்குன் நெகாரா தேசியக் கோட்பாடுகள் குறித்து சிலாங்கூர் சுல்தான் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், தோனி புவா சர்ச்சைக்குரிய அக்கருத்தை வைத்ததாகத் தெரிய வருகிறது.



