
கோலாலம்பூர், மே-7-ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வுச் சம்பவத்தில் உயிரிழந்த இந்தியப் பிரஜையான விஜயலட்சுமியின் குடும்பத்தினர், மலேசிய அரசாங்கத்திடம் நியாமான இழப்பீடு கோரியுள்ளனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில், 8 மீட்டர் ஆழத்திற்கு உருவான திடீர் பள்ளத்தில் விழுந்து விஜயலட்சுமி உயிரிழந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் மரம் விழுந்து உயிரிழந்த ஒருவருக்கு நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டுத் தொகையை முன்னுதாரணமாகக் கொண்டு, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று கிள்ளானில் ஓர் உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விஜயலட்சுமியின் மகன் சூர்யா மற்றும் வழக்கறிஞர் எம். பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு அதனைத் தெரிவித்தனர்.
பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட அலட்சியமே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என்றும், நிலத்தடி குழாய் வெடிப்பு மற்றும் புவியியல் மாற்றங்கள் குறித்து ஆரம்பக்கட்ட அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகவும் பார்த்திபன் மேலும் கூறினார்.
மரணச் சான்றிதழைப் பெறுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே அலைந்ததில் பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள குடும்பத்தினர், முறையான இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
தேசியப் பதிவிலாகாவிடமிருந்து நேற்றுதான் மரணச் சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், இது குறித்து கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹானா இயோ மற்றும் கோலாலம்பூர் மாநகர மன்றத்துடன் (DBKL) பேச்சுவார்த்தை நடத்த வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு முன்பு, சாலைத் தடுப்புச் சுவரில் மரம் விழுந்ததில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு, 824,180 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் DBKL-லுக்கு உத்தரவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.



