
கோலாலம்பூர், ஜூன்-8-மியன்மார் பிரஜை ஒருவருக்கு நீல நிற MyKad அடையாள அட்டை வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ குறித்து, புத்ராஜெயா போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூன் 5-ஆம் தேதி இது தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
இதில், ‘Na’am Ahmad’ என்ற ஃபேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்ட அந்த வீடியோ, மூன்றாம் தரப்பினரால் மறுபதிவேற்றம் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
மேலும், வீடியோவை ஆய்வு செய்ததில், மியன்மார் பிரஜையிடம் MyKad இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த, எந்தவோர் அடையாள ஆவணமோ அல்லது MyKad அட்டையோ அதில் காண்பிக்கப்படவில்லை என, புத்ராஜெயா மாவட்ட போலீஸ் கூறியது.
என்றாலும், உண்மையை அறிய இந்த விவகாரம் தேசிய பதிவிலாகாவான JPN-க்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், ஆதாரமற்ற மற்றும் சரிபார்க்கப்படாத இத்தகைய போலித் தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.



