
கோலாலம்பூர், ஆகஸ்ட்.07-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மீதான ஊழல் வழக்கு விசாரணை இம்மாதம் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு விசாரணை இன்று கோலாலம்பூர் செஷன்ஸ நீதிமன்றத்தில் நடைபெறுவதாக இருந்தது.
எனினும் அவர் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இஸ்மாயில் சப்ரி சிகிச்சை பெற்று வருவதால், அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்த போதிலும், அவற்றை வாசிக்கவோ அல்லது அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவோ இயலவில்லை.
அவருக்கு இன்று இதயத் துடிப்பைச் சீராக்கும் கருவி பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வழக்கறிஞர் Datuk Amer Hamzah Arshad தெரிவித்தார்.
மேலும் விவரித்த அவர், இஸ்மாயில் சப்ரிக்கு ஏற்கனவே மருத்துவப் பிரச்சனைகள் இருந்ததாகவும், இரண்டு வாரங்களுக்கு முன் கீழே விழுந்ததால் அவர் Pantai மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அடுத்த திங்கட்கிழமை IJN-இல் அவரை மறுபரிசோதனைக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் , நேற்று காலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வாக்குமூலம் பதிவு செய்த பின், அவரது உடல்நிலை காரணமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக Amer Hamzah மேலும் விளக்கினார்.
எனவே விசாரணையை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.சொத்து விவரங்களை அறிவிப்பது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய, இதற்கு முன்னரும் MACC அவரைப் பலமுறை அழைத்திருந்தது.
170 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தையும், சுமார் 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகளையும் இதற்கு முன் விசாரணையின் போது MACC கைப்பற்றியது.
கடந்தாண்டு பிப்ரவரியில் இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய நான்கு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



