Latestமலேசியா

வீட்டுக் காவல் விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சர் Saifuddin

கோலாலம்பூர், அக்.07-வீட்டுக் காவல் தொடர்பான விதிமுறைகள், குறிப்பாக சிசிடிவி கண்காணிப்பு, மின்னணு கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் குறித்த நடைமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

முன்மொழியப்பட்ட சட்டவரைவு இன்னும் இறுதி செய்யப்பட்டு வருவதாலும், தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாலும், குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் தற்போது எந்தவொரு வீட்டுக் காவல் உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. விசாரணை நிறைவடையும் வரை சிறையில் வைப்பதற்கு பதில், குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் கைதிகளை வீட்டுக் காவலில் வைப்பதைப் பரிசீலிக்க அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளதாக Saifuddin கூறினார்.

இதனிடையே, வீட்டுக் காவல் தொடர்பான அனைத்து அம்சங்களும் இறுதி செய்யப்படும் சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் தர செயல்பாட்டு நடைமுறைகளுக்கு (SOP) உட்பட்டதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்குக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி நிபந்தனையுடன் கூடிய வீட்டுக் காவலை அனுமதித்திருந்தார். அது குறித்து பேசிய Saifuddin, அது முன்மொழியப்படும் வீட்டுக் காவல் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உத்தரவிலிருந்து வேறுபட்டது என விளக்கினார்.

நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு என்பது கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்படும் மன்னிப்பு அதிகாரத்தின் ஒரு பகுதியாகும். அதன் நிபந்தனைகள் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பின் முடிவுகளுக்கு உட்பட்டவை. எனவே நிபந்தனையுடன் வீட்டுக் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் நபர்களுக்கான பார்வையாளர் அனுமதி, நடமாட்டக் கண்காணிப்பு மற்றும் பிற கட்டுப்பாடுகள் தொடர்பான நடைமுறைகள் உரிய SOP மூலம் வரையறுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!