
பிராயா, மே-5-( Hantavirus) வைரஸ் பரவல் சந்தேகத்தின் பேரில் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கேப் வெர்டே (Cape Varde ) தீவு நாட்டின் கடற்பரப்பில் சிக்கியிருந்த ஒரு சொகுசு கப்பலை துறைமுகத்தில் நிறுத்த உள்ளூர் அதிகாரிகள் தடை விதித்ததால், அதில் இருந்த பயணிகளும் கப்பல் ஊழியர்களும் திங்களன்று தனிமைப்படுத்தப்பட்டனர்.
பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு கூறியபோதிலும், அவர்களைக் கப்பலிலிருந்து இறங்க அனுமதிக்க மறுக்கப்பட்டது.
பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பயணிகளும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த கப்பல் ஊழியர்களும் உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த 149 பேர் எம்.வி. ஹோண்டியஸ் (M.V. Hondius ) கப்பலில் இருந்தனர்.
பிரிட்டன் பயணி ஒருவர் ஜோஹன்னஸ்பர்க்கில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில், பிரிட்டன் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த இரண்டு கப்பல் ஊழியர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் அந்த கப்பல் நடத்தும் நிறுவனமான (Oceanwide Expedition ) தெரிவித்தது.
தற்போதைக்கு, கப்பலில் வேறு யாருக்கும் தொற்று அறிகுறிகள் இல்லை, ஆனால் இது கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மற்றும் பெருந்தொற்று தயார்நிலை மற்றும் தடுப்பு இயக்குநர் மரியா வான் கெர்கோவ் ( Maria Van Kerkhove ) கூறினார்.
கிருமி நீக்கம் மற்றும் பிற நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, பயணிகள் தங்கள் அறைகளிலேயே தங்கி, தங்கள் ஆபத்தைக் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று அவர் வெளியிட்ட காணொளியில் வலியுறுத்தினார்.



