Latestஇந்தியா

பீகாரில் கர்ப்பமாக்கும் வேலை எனக்கூறி நூதன மோசடி; நிறுவனத்தை நடத்திய 8 பேர் கைது

பீகார், ஜன 3 – புதுமையான முறையில் பல மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன. அந்த வகையில் பீகாரில் கர்ப்பம் தரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்களை கருத்தரிக்க வைக்கும் ஆண்களுக்குப் பல லட்சம் வழங்குவதாகக் கூறி, மோசடி வேலை பார்த்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

‘All India Pregnant Job Service’ என்ற பெயரில் இந்த மோசடியை நடத்தியதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆண்களை தொடர்பு கொண்டு, கரு தரிக்க முடியாத பெண்களைக் கர்ப்பமாக்கும் சேவைக்குக் கைமாறாக, பல லட்சம் சன்மானம் பெற முடியும் என்று ஆசைகாட்டி வலை விரித்துள்ளனர்.

இந்த வேலைக்கு ஆர்வமுள்ள ஆண்கள் முதலில் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்தவுடன், சில பெண்களின் புகைப்படங்கள் அனுப்பபடும். அவர்கள் தேர்வு செய்யும் பெண்களுடன் ஒன்றாக இருந்து அவர்களைக் கருத்தரிக்க வைக்க வேண்டுமாம்.

வெற்றிகரமாக அப்பெண்களைக் கருத்தரிக்க வைக்கும் பட்சத்தில், அவர்களுக்கு சன்மானமாக 13 லட்ச ரூபாய் அதாவது 72 ஆயிரம் ரிங்கிட் மேல் வழங்கப்படுமாம்.

ஒருவேளை கருத்தரிக்க வைக்க முடியாத பட்சத்தில், 27 ஆயிரம் ரிங்கிட் சன்மானம் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்துள்ளனர். இதனை உண்மை என நம்பி பலர் இதில் முதலீடு செய்த நிலையில், ஏமாந்த பின்னரே அது மோசடி கும்பல் என்பதை அறிந்துள்ளனர்.

பீகார் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு சோதனை நடத்திய பின்னர் இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருவதாகப் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!