
புத்ராஜெயா, செப்-04- இந்தியச் சமூகத் தலைவர்களைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகச் சந்தித்து உரையாடியது, அச்சமூகத்தின் மேம்பாட்டு முன்முயற்சிகளுக்கு அரசாங்கம் அளிக்கும் உயர்மட்ட முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
இனி தொடர் நடவடிக்கைகளே மிக முக்கியம். முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் வெறும் குறிப்புகளாகவோ அல்லது விவாதங்களாகவோ மட்டும் நின்றுவிடக்கூடாது. ஒவ்வொரு விவகாரமும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகளாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் 2027 வரவுசெலவு அறிக்கைத் தயாரிப்பில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். அரசாங்கத்தின் திட்டங்கள் இலக்கு வைக்கப்பட்ட தரப்பினரைச் சென்றடைவதே உண்மையான வெற்றி என ரமணன் சுட்டிக் காட்டினார்.
பிரதமர் இந்தியச் சமூகத்திற்குத் தகுந்த உறுதிமொழியை அளித்துள்ளார். அவற்றை உரிய வகையில் மக்களுக்குக் கொண்டுச் சேர்ப்பதே நமது தற்போதைய பொறுப்பு என்றாரவர்.
வறுமை, கல்வி, பொருளாதார வாய்ப்புகள் மற்றும் குடியுரிமை உள்ளிட்ட மலேசிய இந்தியச் சமூகத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் எப்போதும் கடப்பாடுடன் செயல்படும் என பிரதமர் முன்னதாக பகிரங்க உறுதியளித்திருந்தார். இந்தியச் சமூகத் தலைவர்களுடனான கலந்துரையாடலுக்குப் பின் அவர் அத்தீர்க்கமான செய்தியை வெளியிட்டிருந்தார்.
அந்நிகழ்வில் ரமணன் உட்பட தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



