
கோலாலாம்பூர், ஜூன்-17-இந்தியச் சமூகம் உட்பட ஒட்டுமொத்த நலிவடைந்த பிரிவினருக்குமான பொருளாதார உதவித் திட்டங்களில், காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இனவாரி அணுகுமுறையை மாற்றி, புதியதொரு சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என Parti BERSAMA கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாக இந்தியச் சமூகத்தைப் பற்றிக் பேசும்போது, எத்தனை சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன அல்லது எத்தனை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றே விவாதிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய அணுகுமுறைகள் ஏழ்மையை வேரறுக்க உதவாது என்றார்.
வறுமையில் வாடும் ஒரு குடும்பம், தான் உதவி பெறத் தகுதியானவர் என்பதை நிரூபிக்க எந்தவொரு சிறப்புத் திட்டத்திற்காகவும் காத்திருக்கவோ அல்லது அரசிடம் “விண்ணப்பிக்கும்” நிலையிலோ இருக்கக் கூடாது என, BERSAMA கட்சியுடனான கலந்துரையாடல் நிகழ்வில் நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தில் ரஃபிசி சொன்னார்.
ஏழை இந்தியராக இருந்தாலும், சீனராகவோ அல்லது மலாய்க்காரராகவோ இருந்தாலும், கஷ்டப்படும் எந்தவொரு மலேசியருக்கும் இயல்காகவே உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதே அவரது முக்கிய வாதமாகும்.
எந்தவோர் இனம் தங்களை அதிகமாகப் பிரதிநிதிக்கிறது என வாதிடுவதை விடுத்து, யாருக்கு உண்மையாகவே உதவித் தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைச் சரியாகச் சேர்ப்பிப்பதே ஒரு சிறந்த அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் ரஃபிசி குறிப்பிட்டார்.
இதற்காக “தேவை அடிப்படையிலான” உதவிகளுக்கான அளவுகோல் என்ன என்பதைப் பற்றி, அரசு எவ்வித ஒளிவுமறைவுமின்றி திறந்த மனதுடன் விவாதிக்கத் தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காகப் பாராட்டுத் தேடுவதை விடுத்து, மக்களின் வாழ்க்கை தரம் உயர்கிறதா என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
இந்த கலந்துரையாடலில் ரஃபிசியுடன் முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் கலந்துகொண்டார்.



