போர்டிக்சன், ஏப்ரல்-3, போர்டிக்சனில் கடல் சிப்பிகளை உண்டதால் நச்சுணவுப் பாதிப்பு ஏற்பட்டு 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், ஐவர் சாதாரண வார்டுகளிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலுமொருவர் வெளி நோயாளியாக சிகிச்சைப் பெற்றார்.
தலைவலி, கைக்கால்கள் மரத்துப் போவது, தசை பலவீனம் அடைவது போன்ற அறிகுறிகளால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அவர்கள் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், போர்டிக்சன் சுற்று வட்டாரத்தில் 2 சந்தைகளில் வாங்கிய கடல் சிப்பிகளைச் சாப்பிட்டவர்கள் என்றும் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறையின் இயக்குனர் Datuk Dr. Harlina Abdul Rashid அறிக்கையொன்றில் அதனைத் தெரிவித்தார்.
தற்போது மாநில மீன்வளத்துறையின் ஒத்துழைப்புடன் சிப்பி மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
சிப்பி உட்கொண்டு மேற்கண்ட அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனையை நாடி சிகிச்சைப் பெறுமாறும் Dr Harlina கேட்டுக் கொண்டார்.