
கோலாலம்பூர், மே-14- குடிபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் சமரசமின்றி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.
ஜாலான் அம்பாங்கில் அண்மையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த தம்பதியரான ஏ. துரைசிங்கம் மற்றும் ஏ. மேனகா குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்த பின்னர் அவர் இதனை கூறினார்.
இந்தச் சம்பவம் ஒரு சாதாரண சாலை விபத்து அல்ல, குடிபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டிய ஒருவரின் பொறுப்பற்ற செயலால் ஒரு குடும்பமே இன்று ஆதரவை இழந்து துயரத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

உயிரிழந்த தம்பதியரின் மூன்று பிள்ளைகளும் தற்போது பெற்றோரின் ஆதரவின்றி வாழ்க்கையை தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
“மூத்த மகன் இளம் வயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது பிள்ளை அண்மையில்தான் படிப்பை முடித்துள்ளார். இளைய பிள்ளை எதிர்கால வாழ்க்கையைத் தொடங்கியுள்ள நிலையில், ஒரே நொடியில் தாய், தந்தை மற்றும் குடும்ப ஆதரவை இழந்துள்ளனர்” என்று துணையமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.
குடிபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்குக் கட்டாய சிறைத் தண்டனையை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும், உயிரிழப்பு அல்லது கடுமையான காயங்களுக்கு காரணமானவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஆயுள் முழுவதும் ரத்து செய்வதையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரவுநேரங்கள், வார இறுதிகள் மற்றும் பண்டிகைக் காலங்களில் சாலைத் தடுப்பு சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், உரிமமின்றி மதுபானம் விற்பனை செய்யும் கடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், குடியிருப்புப் பகுதிகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் அருகே மதுபான விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மதுபான விற்பனை நேரத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் சிகரெட் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைப் போல மதுபான பொருட்களை வெளிப்படையாகக் காட்சிப்படுத்துக் குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலையை த் தொடர்ந்து கவனித்துத், தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



