
யான், ஜூன்-29-கெடா, யானில் (Yan) உள்ள பத்து ஹம்பார் (Batu Hampar) நீர்வீழ்ச்சி இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்த 4 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இன்று காலை 10 மணிக்கு மேல் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, யான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
திடீர் வெள்ளத்தின் கடுமையான நீரோட்டம் காரணமாக, அக்குடும்பத்தினர் ஆற்றின் மறுபுறம் அக்கரையிலேயே தங்கி தங்களின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தவித்தனர்.
பாதுகாப்புக் கயிறுகள் மற்றும் பிரத்யேக மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி, தீயணைப்பு வீரர்கள் சீறிப்பாய்ந்த வெள்ளத்தைக் கடந்து சென்று, பாதிக்கப்பட்ட 6 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
காலை 11.20 மணியளவில் இந்த மீட்பு நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்த வேளையில், மீட்கப்பட்ட அனைவரும் எவ்வித காயமுமின்றி நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



