Latestமலேசியா

23 ஆண்டுகள் ஒரே இடத்தில் பாதுகாப்பு அதிகாரி வேலை; ‘அங்கிள் ஜீவா’-வின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு இணையத்தில் வைரல்

கோலாலாம்பூர், ஜூலை-1-ஒரே இடத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுவலராக (Security Guard) மிகவும் விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வரும் ‘அங்கிள் ஜீவா’ என்று அழைக்கப்படும் ஒருவரின் கதை மலேசியர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

குவாந்தான், கம்பாங்கில் உள்ள பஹாங் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் வேலை செய்யும் 39 வயது L. ஜீவநேசன், தான் இந்த வைரல் நாயகன்.

கடந்த 23 ஆண்டுகளாக தனது பணியைச் செவ்வனே செய்து வரும் அவர், அந்த வட்டாரத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்வதோடு மட்டுமல்லாமல், எப்போதும் முகமலர்ச்சியுடனும், இன்முகத்துடனும் மக்களை வரவேற்பதால் அனைவராலும் நேசிக்கப்படும் ஒருவராக விளங்குகிறார்.

படிவம் 3 வரை மட்டுமே படித்துள்ள ஜீவா, ஆரம்பத்தில் 450 வெள்ளி மாதச் சம்பளத்தில் சாதாரண பாதுகாவலராகச் சேர்ந்து, அடுத்த ஆண்டே தலைவராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் வெவ்வேறு குணங்களைக் கொண்ட மனிதர்களைக் கையாளுவதில் சவால்களை எதிர்கொண்டாலும், வாழ்வாதாரத்திற்காக அனைவரிடமும் இன்முகத்தோடு பழகப் பழகிக்கொண்டதாக அவர் கூறுகிறார்.

மேலும், சிங்கப்பூரில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு கிடைத்தபோதும், முதியவரான தந்தை மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாயாரைப் பிரிய மனமில்லாமல் அந்த வாய்ப்பை அவர் மறுத்துள்ளார்.

சிலர் இந்த வேலையைச் சாதாரணமாக நினைத்தாலும், இதில் பொறுப்புகளும் சவால்களும் அதிகம் என்றும், மக்களுக்கு உதவும் இந்தத் தொழில் தமக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாகவும் ஜீவா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தையான அவரின் இந்த அசாத்திய உழைப்பும் கடமை உணர்வும், எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதில் காட்டும் உண்மையும் நேர்மையும் தான் ஒருவருக்குப் பெருமை சேர்க்கும் என்பதை உணர்த்துகிறது.

‘அங்கிள் ஜீவா’வின் இந்தத் தியாக உணர்வைப் பாராட்டி வரும் இணையவாசிகள், இன்றைய இளையத் தலைமுறையினர் இவரை ஒரு சிறந்த முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தங்களின் பணிகளில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனத் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!