
ஷா ஆலாம், ஜூலை-14-சிலாங்கூரில் நீண்ட காலமாக நிலப் பத்திரப் பதிவுப் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கும் நிகழ்வு ஷா ஆலாமில் உள்ள மாநில அரசுச் செயலகத்தில் (SUK) நடைபெற்றது.
பந்திங் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு அமுலாக்கக் குழுவின் தலைவருமான வீ.பாப்பாராயுடு இந்த அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்களையும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட பள்ளிப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.
நிலப் பட்டா நகல்களைப் பெற்றுக் கொண்ட பள்ளிகள் முறையே:
• காப்பார், கிள்ளான் லாடாங் வல்லம்பரோசா தமிழ்ப்பள்ளி,
• சிப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளி,
• சுங்கை பூலோ, லாடாங் கோல்ஃபீல்ட்ஸ் தமிழ்ப்பள்ளி,
• கிள்ளான், லாடாங் ஹைலண்ட் தமிழ்ப்பள்ளி மற்றும்
• பந்திங், சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளி ஆகியவையாகும்.
சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு அமுலாக்கக் குழுவின் தொடர் முயற்சிகளால் இந்த நில உரிமைச் சிக்கல் முறைப்படி தீர்க்கப்பட்டுள்ளதாக, மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான பாப்பாராயுடு சொன்னார்.
இதன் மூலம் இப்பள்ளிகளின் எதிர்கால உள்கட்டமைப்பு மேம்பாடுகள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் அரசாங்க மானியங்களைப் பெறுவதற்கான வழிகள் சட்டப்பூர்வமாக உறுதிச் செய்யப்பட்டுள்ளன.
மாநிலக் கல்வி இலாகா, நிலம் மற்றும் சுரங்க அலுவலகம், மாவட்ட நில அலுவலகங்கள், பள்ளிகளின் மேலாளர் வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு உழைப்புக்கு தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்ட பாப்பாராயுடு, சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சியை வலுப்படுத்துவதில் எப்போதும் உறுதியுடன் செயல்படும் என்றும் தெரிவித்தார்.



