
கோலாலம்பூர், செப்டம்பர்-4,முந்தைய ஆட்சிக் காலத்தில் சிறப்பு 4D எண்கள் குலுக்கலை ஆண்டுக்கு 22 முறைகளாக உயர்த்திய முடிவு, பாஸ் கட்சி உட்பட அன்றைய அரசாங்கத்தில் இருந்த அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என, தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சிறப்பு எண்கள் குலுக்கல் எண்ணிக்கையை உயர்த்தியதற்கான காரணம் குறித்து எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகரும் முன்னாள் நிதி அமைச்சருமான தெங்கு சாஃப்ருல் இதனைத் தெளிவுப்படுத்தினார்.
சிறப்பு குலுக்கல்கள் 1999-ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டன; அப்போதைய பாரிசான் நேஷனல் ஆட்சிக் காலத்திலேயே 22 குலுக்கல்கள் வரை நடத்த அனுமதி இருந்தது.
இந்நிலையில் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அன்றைய அரசு அந்த அதிகபட்ச வரம்பைப் பயன்படுத்தியதாகவும், அது குறித்த விவரங்கள் நாடாளுமன்றத்திலும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
உண்மையில்தற்போதைய மடானி அரசாங்கத்தின் கீழ், இந்தச் சிறப்பு குலுக்கல்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு வெறும் 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
உண்மைகள் தெளிவாக இருப்பதால், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களிலிருந்து அரசின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையிலான இந்த விவாதத்தை மேலும் நீட்டிக்கத் தேவையில்லை என்றும் தெங்கு சாஃப்ருல் கேட்டுக் கொண்டார்.



