
கோலாலம்பூர், அக்டோபர் 8 — லாவோஸிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு 521 கிலோ ஷாபு போதைப்பொருளைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் தனியார் ஜெட்டை வாடகைக்கு எடுத்த நபரை மலேசிய போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த ஜெட்டை 49,500 அமெரிக்க டொலர் அதாவது 202,250 ரிங்கிட்டை செலுத்தி வாடகைக்கு எடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விமானம் மலேசியாவைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது.
இந்த வழக்கு தொடர்பாக விமான நிறுவனத்தின் உரிமையாளரும் விமானியுமான 49 வயது ஆடவர், சிங்கப்பூரைச் சேர்ந்த 47 வயது துணை விமானி மற்றும் இரண்டு மலேசியப் பெண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் 37 வயது மருத்துவர், மற்றொருவர் 33 வயது செவிலியர் ஆவார்.
லாவோஸ் அதிகாரிகள் ஏற்கனவே இந்தச் சம்பவம் தொடர்பாக 13 பேரைக் கைது செய்துள்ளனர். முதலில் சுபாங் விமான நிலையத்திலிருந்து லுவாங் பிரபாங் (Luang Prabang) சென்ற அந்த ஜெட்டில் எந்தப் பொருளும் கொண்டு செல்லப்படவில்லை.
பின்னர், அந்த விமானம் மூலம் பெருமளவு போதைப்பொருளை பிலிப்பைன்ஸுக்குக் கடத்த முயற்சி நடந்ததாக நம்பப்படுகிறது. ஜெட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து, அதற்கான பணத்தைச் செலுத்திய நபரின் தொடர்பு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



