
புத்ராஜெயா, ஜூலை.31- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தாபூங் ஹாஜி தொடர்பான RCI எனும் அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்த விசாரணையை இன்று தொடங்கியுள்ளது. அதற்காக MACCயின் விசாரணை அதிகாரிகள் தாபூங் ஹாஜி தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எட்டு பேர் கொண்ட புலனாய்வுக் குழு, RCI அறிக்கையில் காணப்படும் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பான ஆவணங்களையும், விசாரணைக்குத் தொடர்புடைய மற்ற ஆவணங்களையும் அடையாளம் காணும் பணிகளைத் தொடங்கும் என MACC தலைமை ஆணையர் Datuk Seri Abdul Halim Aman தெரிவித்தார்.
அது பறிமுதல் நடவடிக்கை அல்ல. மாறாக, ஆவணங்களைச் சேகரித்து, விரிவாக ஆய்வு செய்து பரிசோதிக்க வேண்டியிருப்பதாக அவர் கூறினார். இக்கட்டத்தில், விசாரணைக்காக உட்படுத்தப்படுவோரை புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் காண்பார்கள். அந்நபரிடம் முறையாகப் பட்டியலிடப்படுவார்கள். விசாரணை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படாது.
சட்டம் மற்றும் பணமோசடித் தடுப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தடுப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட வருவாய் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் வரம்பிற்குள் வரும் விவகாரங்களில் MACC கவனம் செலுத்தும் என Abdul Halim Aman விளக்கினார்.
தாபூங் ஹாஜி தொடர்பான RCI அறிக்கை பொதுவில் வெளியிடப்பட்டதை அடுத்து, அதன் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்ய MACC நேற்று ஒரு சிறப்புப் பணிக் குழுவை அமைத்தது.
2014 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தாபூங் ஹாஜியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்த RCI அறிக்கையை ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கி வெளியிட அமைச்சரவை முன்னதாக ஒப்புக் கொண்டது.
பல நிதி பலவீனங்கள், அதிகாரத் துஷ்பிரயோகம், அரசியல் தலையீடு என தாபூங் ஹாஜியில் பல்வேறு குறைபாடுகளை RCI அடையாளம் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.



