Latestமலேசியா

தாபோங் ஹஜி முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் உட்பட மூவர் 2 நாள் தடுப்புக் காவல்

கோலாலம்பூர், செப்டம்பர் 9 — தாபோங் ஹஜி (TH) முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம் உட்பட மூவரை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தாபோங் ஹஜி வழங்கிய ‘ஹிபா’ தொடர்பான மோசடி குற்றச்சாட்டு மீதான போலீஸ் விசாரணைக்கு உதவும் வகையில் இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்துல் அஸீஸுடன் தாபோங் ஹஜியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முன்னாள் தலைமை நிதி அதிகாரியும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் போலீஸ் மேற்கொண்டு வரும் விசாரணைக்காக, நீதிபதி முகமது அஃபிக் சுபேர் இந்த இரண்டு நாள் தடுப்புக் காவல் உத்தரவை வழங்கினார்.

மூவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ அமெர் ஹம்சா அர்ஷாட், தாபோங் ஹஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் RCI அறிக்கை ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டிருப்பதுடன், விசாரணை ஆவணங்களும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், நீண்ட தடுப்புக் காவல் தேவையில்லை என நீதிமன்றத்தில் வாதிட்டதாகத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், RCI அறிக்கையில் எழுப்பப்பட்ட விவகாரங்கள் தொடர்பான MACC விசாரணைக்காக அப்துல் அஸீஸ் ஆகஸ்ட் 27 முதல் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, செப்டம்பர் 1ஆம் தேதி விடுவிக்கப்பட்டிருந்தார்.

2014 முதல் 2020 வரையிலான தாபோங் ஹஜியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக RCI மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!