தாய்மையே நாட்டின் எதிர்காலம்: உழைக்கும் தாய்மார்களைப் போற்றி ரமணன் அன்னையர் தின வாழ்த்து

புத்ராஜெயா, மே-10,
“தாயின் அன்பில் பிறக்கிறது மனிதம்; தாயின் தியாகத்தில் உயர்கிறது நாடு” என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அன்னையர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ஒரு தாயின் பிரார்த்தனை குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டுமல்ல, ஒரு மனிதாபிமானம் மிக்க சமுதாயத்தையும் உருவாக்குவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
குடும்பப் பராமரிப்பாளர்களாகவும், நாட்டின் பொருளாதாரத்தை உந்தித் தள்ளும் சக்தியாகவும் திகழும் உழைக்கும் தாய்மார்களைப் பாதுகாக்க மனிதவள அமைச்சு (KESUMA) உறுதிபூண்டுள்ளது.
குறிப்பாக, PERKESO மூலம் பிரசவ கால நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இளம் தாய்மார்களின் சுமையைக் குறைக்க முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
“உண்மையான உற்பத்தித் திறன் என்பது ஒரு தாயின் நல்வாழ்விலிருந்தே தொடங்குகிறது” என குறிப்பிட்ட அமைச்சர், பணிச் சூழல் கலாச்சாரம் தாய்மார்களுக்கும், குடும்பங்களுக்கும் ஏற்றதாக அமைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
முதலாளிகள் வழங்கும் இத்தகைய ஆதரவு, மடானி பொருளாதாரத்தின் தரமான மனித மூலதனத்தை உருவாக்க மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், குறையாத உத்வேகமாகத் திகழும் நாட்டின் அனைத்துத் தாய்மார்களுக்கும் தனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.



