Latestமலேசியா

நண்பரின் திருமண கொண்டாட்டத்தில் ஆபத்தான கார் சாகசம்; 7 ஏமன் நாட்டவர்கள் மீது விசாரணை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,கோலாலம்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்ததாகக் கூறப்படும் 7 ஏமன் நாட்டவர்களை போலீஸார் கைதுச் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

23 முதல் 26 வயதுக்குட்பட்ட இவர்களில் ஐவர் கெடாவில் உள்ள அரசுப் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், மற்ற இருவர் பல்கலைக்கழக பட்டதாரிகள் என்றும் கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமுலாக்க இலாகாவின் உதவித் தலைமை ஆணையர் ACP Mohd Zamzuri Mohd Isa தெரிவித்தார்.

ஆகஸ்ட் 28-ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில், ஜாலான் சுங்கை பீசியில் இருந்து ஜாலான் புக்கிட் பிந்தாங் நோக்கிச் சென்ற இரண்டு கார்களில் இருந்த சிலர், கண்ணாடிக்கு வெளியே உடலை நீட்டியபடியும், கண்ணாடி பகுதியில் அமர்ந்தபடியும் பயணித்துள்ளனர்.

நண்பரின் திருமணத்தைக் கொண்டாடும் வகையில், வேடிக்கைக்காக அவர்கள் இந்த ஆபத்தான செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஏழு பேரும் விசாரணைக்குப் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உயிருக்கும் தனிநபர் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் கவனக்குறைவான செயல்கள் தொடர்பான குற்றவியல் சட்டம் பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 500 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!