Latestமலேசியா

“நாங்கள் இந்தியா அல்லது சீனா குடிமக்கள் அல்ல; மலேசியாதான் எங்கள் தாய்மண்!” – சனுசியின் இனவாத கருத்துக்கு விக்னேஸ்வரன் கடும் பதிலடி

சிரம்பான், ஜூலை-25-​மலேசியாவின் பல்லின சமூகங்கள் குறித்து பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். விக்னேஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான், ஜெம்போலில் தேர்தல் பிரச்சாரத்தின் போது​ பேசிய கெடா மந்திரி பெசாருமான சனுசி, நாட்டில் மலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரமும் பொருளாதார பலமும் சரிந்து வருவதாகவும், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இன்னும் பத்தாண்டுகளில் அவை முழுமையாகப் பறிபோய்விடும் அபாயத்தில் இருப்பதாகவும் சொன்னார்.

அதோடு, இந்நாட்டு இந்தியர்களுக்கும் சீனர்களுக்குமாவது இந்தியா, சீனா என்ற பூர்வீக பூமி உள்ளது; ஆனால் மலாய்க்காரர்களுக்கு இருப்பது என்னவோ இந்த Tanah Melayu என்ற மலாய் பூமி மட்டுமே என சனுசி கூறினார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள விக்னேஸ்வரன், மலேசிய இந்தியர்களும் சீனர்களும் அந்த நாடுகளின் குடிமக்கள் அல்ல என்றும், மாறாக இந்நாட்டுக்கு விசுவாசமான மக்கள் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

​இனம் மற்றும் வம்சாவளியைக் கொண்டு மலேசியர்களைப் பிரித்துப் பார்ப்பது நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் என அவர் எச்சரித்தார்.

மலேசியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் இந்த நாடு மட்டுமே சொந்தம் என்றும், நாட்டின் மீதும் மாமன்னர் மீதும் மட்டுமே தங்களின் பற்றுறுதி உள்ளதாகவும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

_”சனுசி பேசியது சரியென்றால், மலேசியாவில் வாழும் இந்தோனேசியர்களும் இந்தோனேசியப் பிரஜைகளாகத்தானே கருதப்பட வேண்டும்? அதே போல் ஓராங் அஸ்லி பூர்வக்குடியினரை சனுசி என்ன சொல்லப் போகிறார்?”_ என விக்னேஸ்வரன் காட்டமாகக் கேட்டார்.

பல்லின மக்களை அணுகுவதில் பாஸ் இதுபோன்ற குறுகிய சிந்தனைக்குப் பதிலாக மிதமான அணுகுமுறையைப் பயன்படுத்தும் அமானா கட்சியை உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுபோன்ற பொறுப்பற்ற, பிரிவினைவாத பேச்சு மற்றும் செயல்களால், பாரிசான் உறுப்புக் கட்சிகளுக்குத் தான் தேவையற்ற தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதற்கெல்லாம் ம.இ.கா அமைதிக் காக்காது என திட்டவட்டமாகக் கூறிய அவர், பெரிக்காத்தானுடன் எந்தவோர் ஒத்துழைப்புமின்றி, பாரிசான் நேஷனல் தனித்தே செயல்பட வேண்டும் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களும் முக்கிய உதாரணம் என்றார்.

​தேசிய ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் இத்தகைய அரசியல் கருத்துகளுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் தற்போது தங்களது எதிர்ப்பைப் பதிவுச் செய்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!