
செர்டாங், ஜூன்-30 – இந்தியச் சமூகத்துக்கான நியாயமான நிதி ஒதுக்கீடுகளில் சிலாங்கூர், ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அபாஸ் சலிமி (Abbas Salimi) பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது
மலேசிய இந்து சங்கத்தின் செர்டாங் கிளை.
பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு தலா 700,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறியப்படுகிறது; அப்படிப் பார்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 2.1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அபாஸ் பெற்றுள்ளார்.
செர்டாங்கில் 93,235 வாக்காளர்களில் 12.27 விழுக்காடாக இந்தியர்கள் இருக்கும் நிலையில், தோராயமாக 257,670 ரிங்கிட்டாவது அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அது வழங்கப்படாதது பெருத்த ஏமாற்றமளிப்பதாக, செர்டாங் இந்து சங்கத்தின் தலைவர் சந்துரு கணேசன் கூறினார்.
செர்டாங் இந்து சங்கமும் பூச்சோங் கிளையும் பல முறை சமூக நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்தும் , அவற்றில் ஒன்று கூட அங்கீகரிக்கப்படவில்லை என அவர் சொன்னார்.
பொதுத் தேர்தலுக்குப் பிறகிலிருந்தே உள்ளூர் இந்திய மக்களை விட்டு சட்டமன்ற உறுப்பினர் சற்றுத் ‘தள்ளியே’ உள்ளார்.
இதனால் சமூக நடவடிக்கைகளுக்கும் ஆலயங்களுக்கும் போதிய நிதி ஆதரவு இல்லை.
குறிப்பாக 3 ஆண்டுகளில் ஒரேயோர் ஆலயம் மட்டுமே அதுவும் வெறும் 1,000 ரிங்கிட் நிதியைப் பெற்றுள்ளது.
2022-லிருந்து செர்டாங்கில் தமிழ்ப் பள்ளிக்கோ ஆலயங்களுக்கோ மாநில அரசின் நிதி ஒதுக்கீடு வரவில்லை என, சந்துரு குறிப்பிட்டார்.
எனவே சட்டமன்றத் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென்பதுடன், அபாஸ் சலிமி உரிய விளக்கமும் அளிக்க வேண்டுமென, சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் வலியுறுத்தினார்.
இதில் செர்டாங் இந்து சங்கத்திரோடு அரசு சாரா இயக்கத்தினரும் பங்கேற்றனர்.
சிலாங்கூரில் நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக அதுவும் உள்ளூர் இந்திய மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.