
புத்ராஜெயா, அக்-27-வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு (KPKT), தனது அமைச்சின் வளாகத்திலுள்ள Dewan Kristal மண்டபத்தில் தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சிறப்பாக நடத்தியது. பல்வேறு இன மற்றும் கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட பணியாளர்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இது KPKT வரலாற்றிலேயே மிகப் பெரிய தீபாவளிக் கொண்டாட்டமாகும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming தெரிவித்தார். ஹரி ராயா, சீனப் புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகளை ஒன்றிணைந்து கொண்டாடுவது, நாட்டின் பன்முகத்தன்மையை மதிப்பதுடன் மக்களிடையே ஒற்றுமையையும் பரஸ்பர புரிதலையும் வளர்க்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய, இணக்கமான மற்றும் வளமான சமூகத்தை உருவாக்கும் மடானி அரசாங்கத்தின் நோக்கத்திற்கேற்ப இம்முயற்சி அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்தியச் சமூகத்தின் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக Nga Kor Ming தமதுரையில் தெரிவித்தார். மித்ரா மூலம் B40 பிரிவைச் சேர்ந்த 4,000 இந்தியக் குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்காகத் தலா 2,530 ரிங்கிட் வரை மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, B40 பிரிவைச் சேர்ந்த 1,300 சிறுநீரக நோயாளிகளுக்கு ஆண்டுக்கு 5,000 ரிங்கிட் வரை டயாலிசிஸ் சிகிச்சைக்கான உதவி வழங்கப்படுகிறது. அன்றாடத் தேவைகள், திருமணம், மூக்குக் கண்ணாடிகள், இறப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. கோயில்கள் உள்ளிட்ட முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைப் பராமரித்து மேம்படுத்துவதற்காக 200 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியையும் KPKT ஒதுக்கியுள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் இந்தியச் சமூகத்தின் கலை மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேளத்துடன் கூடிய பாரம்பரிய நடனங்கள், BollyOn குழுவின் நிகழ்ச்சி, சிலம்பாட்டம் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தன. அதோடு, திடக்கழிவு மற்றும் பொதுச் சுத்திகரிப்பு மேலாண்மைக் கழகத்தின் குழுப்பாடல் நிகழ்ச்சியும், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இசைக்குழு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை துணை அமைச்சர் Datuk Hajah Aiman Athirah, அமைச்சின் பொதுச் செயலாளர் Datuk Wira Dr. M Noor Azman உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சின் அதிகாரிகள், அதன் கீழ் இயங்கும் துறைகள், நிறுவனத் தலைவர்கள், பணியாளர்கள் எனப் பலரும் பாரம்பரிய உடைகளில் பங்கேற்றனர்.



