
கோலாலம்பூர், மே-11- பங்சாரில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் கடந்த மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை லோரி ஓட்டுநர் ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார்.
ஏப்ரல் 22 ஆம் தேதி அதிகாலை மணி 3.15க்கு , ஜாலான் தெலாவியில் உள்ள பொழுதுபோக்கு மையத்தின் முன்பாக, பழைய உலோக வர்த்தக உரிமையாளரான 41 வயது பி. யோக சுந்தரத்தை ( Yoga Sundram ) கொலை செய்ய முயன்றதாக 27 வயது ஏ. லேகேஸ்வரன் (Lekeswaran) மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் அதிகப்பட்டசமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் , அபராதம் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 307-வது பிரிவின் கீழ் லேகேஸ்வரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தச் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் காயம் ஏற்படுத்தியிருந்தால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பாதிக்கப்பட்டவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு கடுமையானது என்பதோடு துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளானவர் தற்போது மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்குவதற்கு அரசு தரப்பு துணை வழக்கறிஞர் ஜே. பானுஷா மறுத்துவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர், கிள்ளான் நீதிமன்றத்தில் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என்றும் அறியப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து லேகேஸ்வரனுக்கு ஜாமின் வழங்க நீதிபதி மசூலியானா அப்துல் ரஷீத் ( Mazuliana Abdul Rashid ) மறுத்ததோடு இந்த வழக்கு ஜூன் 10 ஆம்தேதி மறுவிசாரணைக்கு செவிமடுக்கப்படும் என தெரிவித்தார்.



